Saturday, April 25, 2009
அகதி முகாம்களில் தங்கியுள்ள சிவிலியன்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர் – UNHCR :
அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களில் தங்கியுள்ள அப்பாவிச் சிவிலியன்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மைக் காலமாக பெரும் எண்ணிக்கையிலான சிவிலியன்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தந்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான சிவிலியன்கள் வரையறுக்கப்பட்ட இடத்தில் தங்க வைக்பப்பட்டுள்ளதனால் சிக்கல்கள் உருவாகியுள்ளதென தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சிவிலியன்கள் இடப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருவதாக குறிப்பிடப்படுகிறது. மேலும், கடும் வெய்யில் காலநிலையிலும் அதிக சிவிலியன்கள் கூடாரங்கள் இன்றி அல்லலுறுவதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தரும் சிவிலியன்கள் தங்குவதற்கு போதியளவு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. உணவு, சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென கோரப்பட்டுள்ளது. அப்பாவிச் சிவிலியன்களுக்கு உதவியளிக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் முகவர் நிறுவனம் பெருந்தொகை கூடாரங்களை விமானம் மூலம் அவசரமாக தருவிக்கத் திட்டமிட்டுள்ளது. அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பெரும் எண்ணிக்கையிலான சிவிலியன்கள் குறைபோசாக்கு நிலையில் காணப்படுவதாக தொண்டு நிறுவன பணியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மருத்துவ பணியாளர்கள் மற்றும் காயமடைந்த, நோய்வாய்ப்பட்டோரை சிகிச்சைகளுக்கான அழைத்து செல்வதற்கு போதியளவு போக்குவரத்து வசதிகளும் உடனடியாக செய்து கொடுக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment