Thursday, April 23, 2009

ஈழத்தமிழர்களை காக்கக் கோரி அ.தி.மு.க. தொண்டர் தீக்குளித்து சிகிச்சை பலனின்றி மரணம்: ஜெயலலிதா மெளன அஞ்சலி

ஈழத்தமிழர்களை காக்கக் கோரி பண்ருட்டியை சேர்ந்த அதிமுக தொண்டரான சுப்பிரமணி (வயது 43). இன்று திடீரென கொளத்தூர் பாளையம் என்ற இடத்தில் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுகிறேன் என்று தீக்குளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள், மனைவி உள்ளனர்.
இலங்கையில் ஈழத்தமிழர்கள் போரில் சிக்கி தவிப்பதை பற்றி அடிக்கடி தனது குடும்பத்தாரிடமும், நண்பர்களிடம் பேசி வந்த இவர், இன்று திடீரென கொளத்தூர் பாளையம் என்ற இடத்தில் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுகிறேன் என்று தீக்குளித்தார்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் சுப்பிரமணியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 90 சதவீதத்திற்கு மேல் தீக்காயங்களுடன் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6 மணிக்கு உயிரிழந்தார். இவர் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுவதை பற்றி தனது டைரியில் எழுதி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஈழத்தமிழருக்காக தீக்குளித்த சுப்பிரமணிக்கு ஜெ. மெளன அஞ்சலி
ஈழத்தமிழர்களை காக்கக் கோரி தீக்குளித்த பண்ருட்டி சுப்பிரமணி (வயது 43) சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். அதிமுகவை சேர்ந்த இவர் தீக்குளித்தது பற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை அதிமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி வேட்பாளர் மோகனை ஆதரித்து மதுரையில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ஈழத்தமிழர்களுக்காக அதிமுகவை சேர்ந்த மணி தீக்குளித்துள்ளார் என்று எனக்கு செய்தி வந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு அதிமுகவினரிடம் கூறினேன்.
ஆனால் மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக சிவகாசியில் இருந்து மதுரை வந்துகொண்டிருக்கும்போது எனக்கு செய்தி வந்தது. இலங்கை தமிழர்களுக்காக உயிர் நீத்த மணியின் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இலங்கை தமிழர்களை காக்கக் கோரி தீக்குளித்த மணிக்காக பொதுக்கூட்டத்தில் கூடியிருக்கும் அனைவரும் இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்த வேண்டும் என்றார். அதன்படி அங்கு நின்றிருந்த பொதுமக்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்

No comments:

Post a Comment